Thursday, January 27, 2011

35. உழுபடையும் பொருபடையும்!

பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார் (35). இப்புலவர், புறநானூற்றில் இச்செய்யுளையும் நற்றிணையில் இரண்டு (158, 196) செய்யுட்களையும் இயற்றியவர். இவரால் பாடப்பட்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 34இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளிவளவனின் நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் குடிக்மக்கள் வரி செலுத்தவில்லை. அவர்களுடைய வரிக்கடன்களை விலக்கி அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு இப்பாடலில் வெள்ளைக்குடி நாகனார் சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவர் உள்ளும்
5 அரசுஎனப் படுவது நினதே பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
10 ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க,
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல் எனவ கேண்மதி:
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
15 முறைவேண்டு பொழுதின் பதன்எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
20 வெயில்மறைக் கொண்டன்றோஅன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
25 பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்;
30 அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறம் தருகுவை யாயின்நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = செறிந்த; இரு = பெரிய; முந்நீர் = கடல்; ஏணி = எல்லை. 2. வளி = காற்று. 3. திணிதல் = செறிதல்; கிடக்கை = பூமி. 6. அலங்கு = விளங்கு; கனலி = ஞாயிறு; வயின் = இடம். 7. இலங்குதல் = ஒளிசெய்தல்; வெள்ளி = சுக்கிரன்; படர்தல் = செல்லுதல். 8. கவர்பு = வேறுபடல், பிரிதல். 9. தோடு = இலை. 10. நுடங்குதல் = ஆடல். 11. அத்தை – அசைச் சொல். 12. கெழு = பொருந்திய. பீடு = பெருமை. 13. நினவ = உன்னிடம்; எனவ = என்னுடைய. 14. புரிதல் = செய்தல்; நாட்டம் = ஆராய்ச்சி. 15. முறை = அரச நீதி (முறையீடு). பதன் = பக்குவம்; தக்க சமயம். 16. உறை= துளி; பெயல் = மழை. 17. கோடு = பக்கம்; கொண்மூ = மேகம். 18. மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 19. பொரு = முட்டிய. 22. வெளிறு = இல்லாமை; துணி = துண்டு; வீற்று = வேறுபாடு. 23. கணம் = திரட்சி (கூட்டம்); கண்ணகன் = அகன்ற இடம்; பறந்தலை = போர்க்களம். 24. ஆர்த்தல் = பொருதல். 25. தரூஉம் = தரும்.; கொற்றம் = வெற்றி. 26. சால் = உழவு சால்; மருங்கு = பக்கம். 27. வாரி = விளைவு. 29. ஞாலம் = உலகம். 31. நொதுமல் = அயல், விருப்பு வெறுப்பு இன்மை. 32.பகடு = எருது; பாரம் =பெருங்குடும்பம்; ஓம்புதல் = பாதுகாத்தல். 33. புறந்தருதல் = ஓம்பல், தோற்றல், புகழ்தல்.

உரை: நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக, காற்றால் ஊடுருவிச் செல்ல முடியாத, வானத்தால் சூழப்பட்ட, மண் செறிந்த இவ்வுலகில், குளிர்ந்த தமிழ் நாட்டிற்கு உரியவராகிய, முரசு முழங்கும் படையுடன் கூடிய சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுக்குள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான். ஒளியுடன் கூடிய கதிரவன் நான்கு திசைகளில் தோன்றினும், ஒளிறும் வெள்ளி தெற்கே சென்றாலும், அழகிய குளிர்ந்த நீரையுடைய காவிரி பல கிளைகளாகப் பிரிந்து நீர்வளம் அளிக்கிறது. அதனால், வேல்களின் தொகுப்பைப்போல் காட்சி அளிக்கும், அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெண்ணிறப் பூக்கள் காற்றில் ஆடுகின்றன. உன்னுடைய நாடு அத்தகைய வளமுடையது. நாடு என்று சொல்லப்படுவது உன்னுடைய நாடுதான். அத்தகைய நாட்டையும் அதில் பொருந்திய செல்வத்தையுமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக.

அறமே (உருவெடுத்து) ஆட்சி செய்வதைப்போல் ஆட்சி புரிந்து, ஆராய்ச்சியுடன் செங்கோல் செலுத்தும் உன் ஆட்சியில் எளியோர் உன்னிடம் நீதி கேட்டால், மழைத்துளியை விரும்பியவர்களுக்குப் பெருமழை பெய்ததைப்போல் வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர். கதிரவனைச் சுமந்து செல்லும் திரண்ட மேகங்கள் உயர்ந்த ஆகாயத்தின் நடுவே நின்று அதன் வெயிலை மறைப்பதுபோல் கணுக்கள் திரண்டு விளங்கி வானத்தை முட்டிப் பரந்து உயர்ந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகப் பிடிக்கப்பட்டது அன்று. கூரிய வேல்களை உடைய சோழனே! உன்குடை குடிமக்களின் வருத்தத்தைப் போக்குவதற்காகப் பிடிக்கப்பட்டது ஆகும்.

யானைகளின் தும்பிக்கைகள், துளையுள்ள பனைமரங்களின் துண்டுகள்போல் வேறுவேறு இடங்களில் வீழ்ந்து கிடக்கும் அகன்ற இடமுள்ள போர்க்களத்தில், உன் படைய எதிர்த்த உன் பகைவர்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள். உன் வீரர்கள் அதைக்கண்டு ஆரவாரித்தனர். பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு நீ பெறும் வெற்றி, உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மழை பெய்யத் தவறினாலும், விளைவு குறைந்தாலும், இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் மக்களின் செயல்களால் தோன்றினாலும் இந்தப் பரந்த உலகம் அரசர்களைத்தான் பழிக்கும். அதை நீ நன்கு அறிந்தனையாயின், அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, காளைகளை ஏர்ககளில் பூட்டி உழவுத் தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பவர்களை நீ பாதுகாப்பாயானால், உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்.

சிறப்புக் குறிப்பு: ”செல்வமுடைய, பெருமை பொருந்திய வேந்தே! உன்னிடம் சில செய்திகளைக் கூறுகிறேன்; நீ என் சொற்களைக் கேட்பாயாக. நீ செங்கோல் செலுத்துகிறாய்; உன் ஆட்சி முறையாக நடைபெறுகிறது. அயலார் கூறும் பயனற்ற சொற்களைக் கேளாது, உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக; நீ அவ்வாறு செய்தால் உன் பகைவர்களும் உன்னைப் புகழ்வர்” என்று அரசன் கேட்குமாறு அறிவுறுத்தியதால், இப்பாடல் செவியறிவுறூஉத் துறையை சார்ந்தது என்று கருதப்படுகிறது.

34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார்.

பாடப்பட்டோன்: கிள்ளிவளவன் (34 - 42, 46, 69, 70, 226 - 228, 373, 386, 393, 397). சங்க கால மன்னர்களில் பலருடைய வரலாறுகள் தெளிவாகத் தெரியவில்லை. கிள்ளிவளவனின் வரலாற்றிலும் விடைகாணமுடியாத வினாக்கள் பல உள்ளன. சிலர் (பேராசிரியர். கோ. தங்கவேலு) கிள்ளிவளவன் என்று அழைக்கப்பட்டவனும், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் என்று கருதுகின்றனர். இருப்பினும், பல வரலாற்று ஆசிரியர்கள் (N. சுப்பிரமணியன், K. A. நீலகண்ட சாஸ்திரி, டாக்டர் பொன். தங்கமணி) கிள்ளிவளவனும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும் ஒருவனே என்று ஆதாரங்களுடன் கூறுகின்றனர். மற்றும் அவன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கரிகாலனுக்குப் பிறகு பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன் கரிகாலனின் மகன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமணியன் தம் நூலில் கூறுகின்றார். மற்றும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்குக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இவர்களில், நலங்கிள்ளியும் கிள்ளிவளவனும் பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. நலங்கிள்ளிக்குப் பிறகு கிள்ளிவளவன் ஆட்சி புரிந்தான் என்றும் கருதப்படுகிறது. மற்றும், கிள்ளிவளவன் காலத்தில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிள்ளிவளவன், சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின்னர் அதைக் கைப்பற்றியது அவனுடைய மிகச் சிறந்த வெற்றியாகக் கருதப்படுகிறது. சேரனை வென்ற பிறகு, மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டு அவனைக் கிள்ளிவளவன் வென்றான். பின்னர், பாண்டிய நாட்டின் மீது கிள்ளிவளவன் படையெடுத்தபோது, பாண்டியரின் படைத்தலைவன் பழையன்மாறன் என்பவனிடம் தோல்வியுற்று கிள்ளிவளவன் இறந்ததாகக் கருதப்படுகிறது.

புறநானூற்றில், கோவூர் கிழார். ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் ஆகியோர் கிள்ளிவளவனைப் புகழ்ந்து 19 பாடல்கள் இயற்றியுள்ளனர்.

கிள்ளிவளவன் வீரத்திலும் வெற்றியிலும் கொடையிலும் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமையுடையனாகவும் இருந்தான் என்பது இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் உள்ள ஒரு பாடலிலிருந்து (பாடல் 173) தெரிகிறது.

இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகவும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாடலின் பின்னணி: கிள்ளிவளவன் ஆலத்தூர் கிழாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்தான். அவற்றைப் பெற்றுக்கொண்டு ஆலத்தூர் கிழார் அவனிடமிருந்து விடைபெறும் தருணத்தில், கிள்ளிவளவன், “நீங்கள் என்னை நினைத்து மீண்டும் வருவீர்களா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான். “செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை; உன்னை நான் எந்நாளும் மறவேன்; உன்னை நான் புகழ்ந்து பாடாவிட்டால், கதிரவன் தோன்றமாட்டான்; நீ நீண்ட நாட்கள் வாழ்க” என்று ஆலத்தூர் கிழார் கிள்ளிவளவனை வாழ்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன
5 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ;
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
10 பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
15 அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபுஅறி யலனே பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ்வுலகத்துச்
20 சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!

அருஞ்சொற்பொருள்:
2. மாண் = மாட்சிமை. 3. குரவர் = மூத்தோர் (பெற்றோர்); தப்பல் = தவறு புரிதல். 4. வழுவாய் = தவறுதல்; மருங்கு = இடம், பக்கம்; கழுவாய் = பரிகாரம். 5.புடை = இடம். 6.செய்தி = செய்கை (செய்த நன்றி); உய்தி = தப்பிப் பிழைத்தல். 7. ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள். 8. அந்தி = மாலைக்காலம், அதிகாலை. 9. புறவு = புறா; புன்புலம் = புல்லிய இடம், தரிசு நிலம். 10. புன்கம் = உணவு, சோறு. 11. சூடு = சுடப்பட்டது; ஒக்கல் = சுற்றம். 12. இரத்தி = இலந்தை மன்றம் = பலர் கூடும் வெளி ( பொதுவிடம்). 13. கரப்பு = வஞ்சகம் (மறைத்தல்). 14. அமலை = திரளை, கட்டி; ஆர்ந்த = அருந்திய. 17. பீடு = பெருமை; நோன்றாள் = நோன்+தாள் = வலிய தாள். 18. படுதல் = தோன்றுதல். 19. தஞ்சம் = எளிமை. 21. ஈண்டுதல் = திரளுதல். 22. கொண்டல் = கீழ்க்காற்று. நுண்பஃறுளி = நுண்+பல்+துளி.

கொண்டு கூட்டு: ஆயிழை கணவ, செய்தி கொறோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வம் முழுதும் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை அந்தியும் மாலை அந்தியும் நின் தாள் பாடேனாயின், பல்கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்று உண்டாயின், நுண் பல்துளியினும் பல காலம் வாழ்வாயாக எனக் கூட்டுக.

உரை: பசுவின் முலையை அறுத்த தீவினையாளர்களுக்கும், (சிறந்த அணிகலன்களை அணிந்த) மகளிரின் கருவை அழித்தவர்களுக்கும், பெற்றோர்களுக்குத் தவறிழைத்தவர்களுக்கும் அவர் செய்த கொடிய செயல்களை ஆராயுமிடத்து, அவர் செய்த பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து நீங்குவதற்குப் பரிகாரம் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நற்செயல்களை அழித்தவர்களுக்கு அவற்றின் விளைவுகளிலிருந்து விடுதலை இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

நன்கு ஆராய்ந்து எடுத்த ஆபரணங்களை அணிந்தவளின் கணவ! காலை வேளையிலும் மாலை வேளையிலும், புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் முட்டை போன்ற வரகினது அரிசியைப் பாலிலிட்டு ஆக்கிய சோற்றில் தேனும், கொழுத்த முயலின் இறைச்சியும் கலந்த உணவை, இலந்தை மரத்தடியில் உள்ள பொதுவிடத்தில், வஞ்சமில்லாத உள்ளத்தோடு, வேண்டுவனெல்லாம் பேசி, பாணர்கள் உண்டு மகிழ்வார்கள். அப்பாணர்களுக்குத் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அளித்த என் தலைவன் கிள்ளி வளவன் வாழ்க என்று பெருமை பொருந்திய உன்னை நான் பாடேனாயின், பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றமாட்டான். நான் எளியவன்; தலைவ! இவ்வுலகில் சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின், இமயமலையில் திரண்ட மேகங்கள் இனிய ஓசையுடன் பெய்த பெருமழையின் நுண்ணிய பல துளிகளைவிட அதிக நாட்கள் நீ வாழ்க.

33. புதுப்பூம் பள்ளி!

பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்படலில் கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியின் நாட்டின் வளத்தையும் பாணர்களுக்கு சோறு அளிக்கப்படும் பாசறைகளின் சிறப்பையும் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
5 குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10 பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும்
15 செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
20 ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. கான் = காடு; கதம் = சினம். 2. சொரிதல் = பொழிதல் = நிறைதல்; வட்டி = கூடை; ஆய் = இடையர். 3. தசும்பு = குடம். 4. அரிவை = பெண் (மகளிர்). 6. முகத்தல் = அளத்தல், மொள்ளல்; உகத்தல் = மகிழ்தல். 7. பொருப்பு = மலை. 8. எயில் = கோட்டை; எறிதல் = முறித்தல். 9. பேழ் = பெருமை; பேழ்வாய் = பெரியவாய்; உழுவை = புலி. 10. வஞ்சி பாடுதல் = பகைவருடைய நாட்டின் மீது படையெடுப்பதைப் பாடுதல். 11. தாதெரு = தாது+எரு; தாது = பூந்தாது; மறுகு = தெரு. 12. இடையிடுபு = இடையிட்டு. 14. அமலை = திரள்; கடும்பு = சுற்றம்; அருத்தல் = உண்பித்தல். 15. செம் = செம்மை; அற்று = அத்தன்மைத்து; செம்மற்று = செம்மையுடைத்து; இருக்கை = இருப்பிடம். 16. தைஇய = இழைத்த; வரி = எழுத்து; வனப்பு = அழகு. 17. அல்லிப்பாவை = அல்லியக் கூத்தில் ஆடும் (பயன்படுத்தப்படும்) உருவம் (பொம்மை); ஏய்தல் = ஒத்தல். 18. யாமம் = நள்ளிரவு; 19. வழங்குதல் = நடத்தல்; கா = பூந்தோட்டம். 20. ஒதுக்குதல் = இயங்குதல்; திணிதல் = செறிதல்; பள்ளி = இடம் (சாலை). 21. மாடம் = மண்டபம்; மை = செம்மறியாடு.

கொண்டு கூட்டு: உழுவை பொறிக்கும் ஆற்றலை யாகலின், பாடுநர் வஞ்சி பாட, பாண்கடும்பு அருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்று எனக் கூட்டுக.

உரை: காட்டில் வாழும் சினக்கொண்ட நாய்களையுடைய வேட்டுவர் மான் தசைகளை விற்பதற்காக கூடைகளில் கொண்டு வருவர்; இடைச்சியர் தயிரை விற்பதற்காகக் குடங்களில் கொண்டு வருவர். ஏரைக்கொண்டு உழவுத்தொழில் செய்யும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர், வேட்டுவர் கொண்டு வந்த தசைகளையும், இடைச்சியர் கொண்டு வந்த தயிரையும் பெற்றுக் கொண்டு, குளக்கரையில் உள்ள நிலத்தில் விளைந்த நெல்லை அள்ளிக் கொடுக்க, வேட்டுவரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய வளமான நல்ல ஊர், தெற்கே பொதிகைமலை உள்ள பாண்டிய நாட்டில் உள்ளது. அங்கே, ஏழு கோட்டைகளின் கதவுகளை உடைத்து அவற்றைக் கைப்பற்றி உன்னுடைய சின்னமாகிய பெரிய புலிவாயைப் பொறிக்கும் ஆற்றல் உடையவன் நீ. நீ படையெடுத்துச் சென்றதைப் புலவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள். உன் படைவீரர்கள் பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருக்களில் உள்ள பாசறைகளில் உலராத பச்சிலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட அரும்புகள் அடங்கிய பூப்பந்தைப் போன்ற, தசைகளோடு கூடிய சோற்றுருண்டைகளைப் பாணர்களின் சுற்றத்தார்களுக்கு அளித்து அவர்களை உண்பிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தது உன் போர்முனைகளின் இருப்பிடம்.

அன்புடைய துணைவனும் துணைவியும், கலை வல்லுநர்களால் செய்யப்பட்ட அழகிய பாவைகள் அல்லியம் என்னும் கூத்தில் ஆடுவதைப்போல், சேர்ந்து செல்லும் குளிர்ந்த மலர்களையுடைய சோலையில், நள்ளிரவில் தனியே சென்றால் காம உணர்வு மிகும் என்ற காரணத்தால் எவரும் தனியே செல்வதில்லை. அந்தச் சோலைகளில், நடத்தற்கு இனிய, மணல் மிகுந்த, புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் உள்ள மாடந்தோறும் செம்மறிக் கிடாவை வெட்டி நீ நடத்தும் விழாக்களைவிட உன் போர்முனைகளில் நீ அளிக்கும் விருந்துகள் பலவாகும்.

32. பூவிலையும் மாடமதுரையும்!

பாடியவர்: கோவூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் – 31இல் காண்க.
பாடப்பட்டோன்:
சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியின் வள்ளல் தன்மையை வியந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ;
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
5 மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போலவவன்
10 கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கடும்பு = சுற்றம்; அடுகலம் = சமையல் பாத்திரம். 3. வணக்கல் = வளைதல்; இறை = முன்கை; பணை = மூங்கில். 7. சுட்டுதல் = நினைத்தல். 8. வேட்கோ = குயவன்; தேர்க்கால் = தேர்ச்சக்கரம் (இங்கு குயவன் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிக்கிறது). 9. குரு = கனம்; திரள் = உருண்டை. 10. குடுமி = முடிவு; பணைநிலம் = மருதநிலம்.

கொண்டு கூட்டு: தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல அவன் கொண்ட குடுமித்து இத்தண்பணை நாடு; ஆதலால், பூவா வஞ்சியும் தருகுவன்; மாட மதுரையும் தருகுவன்; ஆதலால், பரிசில் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ எனக் கூட்டுக.

உரை: நம் சுற்றத்தாரின் சமையல் பாத்திரங்கள் நிறையுமாறு, நெடிய கொடியில் பூவாத வஞ்சி ஆகிய வஞ்சி மாநகரத்தையும் சோழன் நலங்கிள்ளி தருவான். வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான். பரிசிலரே வாருங்கள்; நாம் அனைவரும் அவனைப் பாடுவோம். இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால், நல்ல தொழில் நுட்ப அறிவுள்ள குயக்குலச் சிறுவர் மண்பாண்டங்கள் செய்யும் சக்கரத்தில் வைத்த கனமான பசுமண் உருண்டை, குயவனின் கருத்துக்கேற்ப உருவெடுப்பதுபோல் சோழன் நலங்கிள்ளி எடுத்த முடிவுக்கேற்ப இந்தக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு அமைவது விளங்கும்.

சிறப்புக் குறிப்பு: ”பூவா வஞ்சி” என்றது வஞ்சி நகரத்தைக் குறிக்கிறது. வஞ்சி நகரம் சேர நாட்டிலும், மதுரை நகரம் பாண்டிய நாட்டிலும் இருந்த ஊர்கள். அவ்வூர்களைச் சோழன் நலங்கிள்ளி தருவான் என்று கோவூர் கிழார் கூறியிருப்பதால், இப்பாடல் இயற்றப்பட்ட காலத்தில், அவ்விரு நகரங்களும் சோழன் நலஙிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன என்று தோன்றுகிறது.

31. வடநாட்டார் தூங்கார்!

பாடியவர்: கோவூர் கிழார் (31-33, 41, 44 - 47, 68, 70, 308, 373, 382, 386, 400)
இவர் கோவூரைச் சார்ந்தவர். வேளாண் மரபினர். இவர் புறநானூற்றில் 15 பாடல்களை இயற்றியவர். சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, கோவூர் கிழார், “ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி” என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்திப் போரைத் தடுத்தி நிறுத்தினார் (புறம்- 45). பின்னர், ஒரு சமயம் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளியை ஆவூரில் முற்றுகையிட்ட பொழுது நெடுங்கிள்ளி போரிடாமல் அரண்மனையில் அடைபட்டுக் கிடந்தான். அவ்வமயம், “அறவை யாயின்,’நினது’ எனத் திறத்தல்! மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே “ என்று அறிவுரை கூறினார். மற்றும், சோழன் நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்றன் எனத் தவறாகக் கருதிக் கொல்ல நினைத்தான். அப்போது, புலவர் கோவூர் கிழார், “இளந்தத்தன் ஒற்றன் அல்ல; அவர் ஒரு புலவர்” என்று எடுத்துரைத்து அப்புலவரைக் காப்பாற்றினார் (புறம் - 47). சோழன் கிள்ளிவளவன், மலையமான் என்பவனின் மக்களை யானையின் காலிலிட்டுக் கொல்ல முயன்ற பொழுது, அச்சிறுவர்களின் இயல்புகளைக் கூறி, அவர்களைக் காப்பாற்றினார் (புறம் - 46). புலவர் கோவூர் கிழார், சிறந்த அறிவும், ஆழ்ந்த புலமையும், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கும் மன உரமும் கொண்ட சான்றோர் என்பது அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிகிறது.

பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் -27இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், நலங்கிள்ளியின் வெற்றிகளைச் சிறப்பித்து, “அரசே! நீ போரை விரும்பிப் பாசறையில் இருக்கிறாய். உன் யானைகள், பகைவர்களின் மதிற் சுவர்களைக் குத்தித் தாக்கியதால், அவற்றின் கொம்புகள் மழுங்கி உள்ளன. அவ்வாறு இருந்தாலும், உன் யானைகள் இன்னும் அடங்கவில்லை. உன் படைவீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புபவர்களாக உள்ளனர். ஆகவே, வட நாட்டில் உள்ள மன்னர்கள் நீ எப்பொழுது அங்கே உன் படையுடன் வருவாயோ என்று நினைத்து நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.” என்று கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
அரசவாகை: அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
மழபுல வஞ்சி: பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல்.


சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
பாசறை யல்லது நீயல் லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே;
போர்எனில் புகலும் புனைகழல் மறவர்
10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்தலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப
15 வலமுறை வருதலும் உண்டுஎன்று அலமந்து
நெஞ்சுநடுங்கு அவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே.

அருஞ்சொற்பொருள்:
4. உரு = வடிவழகு, நிறம்; கெழு = பொருந்திய; நிவத்தல் = உயர்தல்; நிவந்து = ஓங்கி; சேண் = சேய்மை. 5.வேட்டம் = விருப்பம், விரும்பிய பொருள். 6.ஒல்லுதல் = உடன்படுதல், இணங்குதல். 7. நுதி = நுனி; மண்டுதல் = நெருங்குதல் (குத்துதல்). 8. பாய்தல் = குத்துதல். 9. புகலுதல் = விரும்புதல்; புனைதல் = அணிதல். 10. நனி = மிகவும்; சேய = தொலைவாக. 11. கல் - ஒலிக்குறிப்பு. 12. விழவு = விழா. 13. குண = கிழக்கு; குட = மேற்கு. 14. புணரி = அலை; மான் = குதிரை; அலைப்ப = அடித்தல் (அலை அடித்தல்). 15. அலமந்து = சுழன்று. 16. அவலம்= துன்பம், வருத்தம்; பாய்தல் = பரவுதல். 17. துஞ்சுதல் = உறங்குதல்.

உரை: அறத்தின் சிறப்பினால், பொருளும் இன்பமும் அறத்தின் பின்னதாகக் கருதப்படுவதுபோல், சேர பாண்டியருடைய கொற்றக்குடைகள் பின் வர உன் கொற்றக்குடை அழகிய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்குகிறது. நல்ல புகழை விரும்பி, உன் தலைநகராகிய பூம்புகாரில் இல்லாமல், நீ வெற்றிதரும் போர்ப்பாசறையிலேயே உள்ளாய். உன் யானைகள், அவற்றின் தந்தங்களின் நுனிகள் மழுங்குமாறு பகைவர்களின் காவலுடைய மதில்களைக் குத்தித் தாக்கியும் அடங்காமல் உள்ளன. போர் என்று கேள்விப்பட்டவுடன் உன் படை வீரர்கள், வீரக்கழல்கள் அணிந்து, போருக்குப் புறப்படுகிறார்கள். பகைவர்களின் நாடு காட்டுக்கு நடுவே, மிகவும் தொலைவில் இருந்தாலும் அங்கே செல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். பகைவர்களின் நாட்டில் ஆரவாரமாக வெற்றிவிழா கொண்டாடிக், கிழக்குக் கடற்கரையிலிருந்து கிளம்பிய உன் குதிரைகளின் குளம்புகளை மேற்குக் கடலின் வெண்ணிற அலைகள் அலம்ப, நீ நாடுகளை வலம் வருவாயோ என்று வடநாட்டு மன்னர்கள் வருந்தி, நெஞ்சம் நடுங்கி உறக்கமின்றி உள்ளனர்.

சிறப்புக் குறிப்பு: பகைவரை வென்று ஆரவாரிப்பதைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டிருப்பதால், இப்பாடல் வாகைத் திணையில் அடங்கும். சோழன் நலங்கிள்ளி, போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது என்று கருதப்படுகிறது. மற்றும், பகைவர்களின் மதில்களை நலங்கிள்ளியின் யானைகள் குத்தித் தாக்கியதையும், அவன் படை வீரர்கள் எப்பொழுதும் போரை விரும்புவதையும், வட நாட்டு மன்னர்கள் நலங்கிள்ளியின் வருகையை நினைத்து நடுங்கி உறக்கமின்றி இருப்பதையும் கூறியிருப்பது பகைவரின் நாட்டை அழிப்பதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையைச் சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.

Thursday, January 20, 2011

30. எங்ஙனம் பாடுவர்?

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”இவ்வுலகில், ஞாயிறு செல்லும் பாதை, அதன் வேகம், காற்றின் இயக்கம், அது செல்லும் திசை, ஆகாயத்தின் தன்மை ஆகியவற்றை நேரில் கண்டு அளந்ததைப்போல் தம் அறிவால் அறிந்தவர்கள் உள்ளனர். அவர்களாலும் அறிய முடியாத அடக்கமும் வலிமையும் உடயவன் நீ. அவர்களால் உன்னை அறிந்துகொள்ள முடியாததால் அவர்கள் எப்படி உன்னைப் புகழ்ந்து பாட முடியும்?” என்று சோழன் நலங்கிள்ளியின் அடக்கத்தையும் ஆற்றலையும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

செஞ்ஞா யிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும், பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்,
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
5 சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்துஎன் போரும் உளரே; அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
10 யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:
1. செலவு = வழி. 2. பரிப்பு = இயக்கம்; மண்டிலம் = வட்டம். 3. வளி = காற்று. 4. காயம் = ஆகாயம். 6. இனைத்து = இத்துணை அளவு. 7. செறிவு = அடக்கம். 8. கவுள் = கன்னம்; அடுத்தல் = சேர்த்தல். 9. துப்பு = வலிமை. 10. கூம்பு = பாய்மர . 11. மீப்பாய் = மேற்பாய்; பரம் = பாரம்; தோண்டல் = அகழ்தல் (எடுத்தல்). 13. புகார் = ஆற்றுமுகம்; தகார் = தகுதி இல்லாதவர். 14. தாரம் = அரும்பண்டம்.

கொண்டு கூட்டு: நாடு கிழவோயே, ஒளித்த துப்பினை ஆதலிற் புலவர் யாங்ஙனம் பாடுவர் எனக் கூட்டுக.

உரை: சிவந்த ஞாயிறு செல்லும் வழியும், அதன் இயக்கமும், அந்த இயக்கத்தைச் சூழ்ந்த வட்டமும், காற்று இயங்கும் திசையும், ஒரு ஆதாரமும் இல்லாமல் வெற்றிடமாகிய ஆகாயத்தின் இயங்கும் தன்மையையும் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்ததுபோல் சொல்லக்கூடிய அறிவும் கல்வியும் உடையவர்கள் உள்ளனர். அத்தகைய அறிஞர்களின் அறிவாலும் அறிய முடியாத அடக்கம் உடையவனாகி, யானை தன் கன்னத்தில் எறிவதற்காக மறைத்துவைத்திருக்கும் கல்லைப்போல் உன் வலிமை மறைவாக உள்ளது. ஆகவே, உன் வலிமையைப் புலவர்களால் எப்படிப் புகழ்ந்து பாட முடியும்?

ஆறு கடலில் கலக்கும் இடத்தில், கூம்புகளையும் பாய்களையும் அகற்றாது, பாரத்தைக் குறைக்காமல், புகுந்த பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களை, அம்மரக்கலங்களைச்
செலுத்தும் தகுதி இல்லாத மீனவர்களும் நெய்தல் நில மக்களும் கொண்டு போகும்பொழுது அப்பொருட்கள் இடைவழியெல்லாம் சிதறிக் கிடக்கின்றன. உன் நாடு அத்தகைய வளமுடையது.

சிறப்புக் குறிப்பு: பெரிய மரக்கலங்கள் துறைமுகத்திற்குள் நுழையும் முன், கூம்பையும் பாய்மரங்களையும் களைவதும், பாரத்தைக் குறைப்பதும் முறையாகச் செய்ய வேண்டிய செயல்கள். காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் துறைமுகத்தில், ஆற்றின் ஆழம் அதிகமாக இருப்பதால் அத்தகைய செயல்களைச் செய்ய வேண்டிய தேவையில்லை என்று தெரிகிறது. மற்றும், பெரிய மரக்கலங்களில் உள்ள பொருட்களின் மிகுதியால், அம்மரக்கலங்களைச் செலுத்துவோர் மட்டுமல்லாமல், அங்குள்ள மற்ற மக்களும் அம்மரக்கலங்களிலுள்ள பொருட்களை நாட்டுக்குள் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் கொண்டு செல்லும் பொழுது, பொருட்கள் வழியிலே சிதறிக் கிடக்கின்றன. பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் காட்சி, சோழன் நலன்கிள்ளியின் நாட்டின், நீர்வளத்தையும், பொருளாதார வளத்தையும் குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

29. நண்பின் பண்பினன் ஆகுக!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், ”வேந்தே, உன் அரசவையில், நாட்பொழுதில் பாணர்கள் சூழ்ந்து உன் புகழ் பாடட்டும்; அதன் பின்னர், மகளிர் உன் தோள்களைத் தழுவி உனக்கு இன்பம் அளிக்கட்டும்; கொடியவர்களைத் தண்டித்து நல்லோருக்கு நீ அருள் செய்வாயாக; மற்றும், நீ சிற்றினம் சேராது வாழ்வாயாக; உன் படைவீரர்கள் உன்னிடம் வருபவர்களுக்கு உதவும் பண்புடையவர்களாக இருப்பார்களாக; இவ்வுலகம் கூத்தாடுபவர்களின் களம் போன்றது. கூத்தர்கள் மாறிமாறி வேடம் அணிந்து வருவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறையே தோன்றி மறையக் கூடியவை. உன் சுற்றத்தார் உனக்கு மகிழ்ச்சி அளிப்பவர்களாக இருப்பார்களாக; உன் செல்வம் உனக்குப் புகழ் தருவதாக.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

அழல்புரிந்த அடர்தாமரை
ஐதுஅடர்ந்த நூல்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலம்நறுந் தெரியல்
பாறுமயிர் இருந்தலை பொலியச் சூடிப்
5 பாண்முற் றுகநின் நாள்மகிழ் இருக்கை;
பாண்முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள்முற் றுகநின் சாந்துபுலர் அகலம்; ஆங்க,
முனிவில் முற்றத்து இனிதுமுரசு இயம்பக்
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
10 ஒடியா முறையின் மடிவிலை யாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன்ஆ கிலியர்;
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழுமீன் சுட்டு
15 வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும்நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
20 சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆகநின் செய்கை; விழவின்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
25 நகைப்புறன் ஆகநின் சுற்றம்;
இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே.

அருஞ்சொற்பொருள்:
1. அழல் = நெருப்பு; அடர் = தகடு. 2. ஐது = நுண்ணியது, நெருக்கம். 3. பொலன் = பொன்; தெரியல் = பூமாலை; நறுமை = நன்மை. 4. பாறுதல் = பரந்து கிடத்தல்; இரு = கரிய. 5. பாண் = பாணர்; முற்றுதல் = சூழ்தல்; இருக்கை = இருப்பிடம். 7. புலர்தல் = உலர்தல்; அகலம் = மார்பு. 8. முனிவு = வெறுப்பு, கோபம். 9. தெறுதல் = அழித்தல். 10. ஒடியா = வளையாத, முறியாத; மடிவு = சோம்பல். 13. ஓப்புதல் = ஓட்டுதல். 14. ஒழிதல் = அழிதல்; மடல் = பனைமட்டை; விறகு = எரிகட்டை; கழி = கடலையடுத்த உப்பங்கழி (உப்பாறு). 15. வெங்கள் = விருப்பமான கள்; தொலைச்சிய = அழித்த. 18. பற்றலர் = பகைவர். 19. கூவை = ஒருவகைச் செடி; துற்றல் = குவிதல், நெருங்கல்(வேய்தல்). 21. நண்பு = நட்பு. 22. ஊழ் = முறை; விழவு = விழா. 23. கோடியர் = கூத்தர்; நீர்மை = குணம், தன்மை. 25. புறன் = இடம்.

கொண்டு கூட்டு: நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின், அகலம் மகளிர் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகாது ஒழிவாயாக; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்; நின் பற்றா மாக்களைப்போல சிறுமனை வாழும் வாழ்க்கையின் நீங்கி வருநர்க்கு உதவியாற்றும் நண்பொடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை உடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் எனக் கூட்டுக.

உரை: பொன்னைத் தீயிலிட்டுத் தகடாக்கிச் செய்த தாமரை மலர்களை நெருக்கமாக நூலால் கோத்து அலங்கரித்துச் செய்யப்பட்ட நல்ல மாலையைக் கரிய முடியுள்ள தலையில் சூடிய பாணர்கள் பகல் நேரத்தில் உன் அரசவையில் உன்னைச் சூழ்ந்திருப்பார்களாக. பாணர்களோடு கூடியிருந்த பிறகு, மகளிர் உன்னுடைய சந்தனம் பூசிய மார்பைத் தழுவுவார்களாக.

விரும்பத்தக்க உன் அரண்மனையின் முற்றத்தில் முரசு இனிதாய் முழங்குவதாக. தீயோரைத் தண்டித்தலும், நடுவுநிலைமை உடையவர்களுக்கு அருள் செய்வதும் சோம்பலின்றி இடையறாத முறையில் நடைபெறுவதாக. நல்வினைகளால் நன்மையும் தீவினைகளால் தீமையும் விளையும் என்பதை மறுப்பவர்களோடு நீ சேராதிருப்பாயாக.

நெல் விளையும் வயல்களுக்கு வரும் பறவைகளை ஓட்டுபவர்கள், பனைமரங்களிலிருந்து கீழே விழுந்த பனைமட்டைகளை விறகாகக்கொண்டு உப்பங்கழியிலுள்ள மீன்களைச் சுட்டுத் தின்று, விருப்பமான கள்ளைக் குடித்து, நிறைவு பெறாதவர்களாகி, தென்னைமரங்களிலிருந்து இளந்தேங்காய்களை உதிர்த்து அவற்றிலிருந்து இளநீரையும் குடித்து மகிழும் வளமான நாட்டை உன்னுடைய படைவீரர்கள் பெற்றிருக்கிறார்கள். உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாவழ்பவர்கள் அங்கிருந்து விலகி உன் இரக்கத்தைப் எதிர்பார்த்து வரும்பொழுது, உன் செயல்கள் அவர்களிடம் நட்புடனும் பண்புடனும் உதவி செய்யும் வகையில் அமைவதாக.

திருவிழாவில் கூத்தாடுபவர்கள் மாறி மாறி வேறு வேறு வேடம் தரித்து ஆடுவதுபோல், இவ்வுலகில் எல்லாம் முறை முறையே தோன்றி மறைவது இயற்கை. அத்தகைய இவ்வுலகில் உன் சுற்றம் மகிழ்வுடன் இருப்பதாக; நீ பாதுகாத்த செல்வம் உனக்குப் புகழ் அளிப்பதாக.

28. போற்றாமையும் ஆற்றாமையும்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: ”குருடு, கூன், செவிடு, ஊமை போன்ற குறைகளுடன் பிறப்பவர்களின் வாழ்க்கை பயனற்றது. நீ அத்தகைய குறைகளுடன் கூடிய பிறவி உடையன் அல்லன். உன் பகைவர்கள் உனக்குப் பயந்து காட்டில் ஒளிந்து வாழ்கிறார்கள். உன் நாடு வளமானதாக உள்ளது. உன் செல்வத்தை அறம், பொருள் இன்பம் ஆகிய உறுதிப் பொருட்களைப் அடைவதற்குப் பயன்படுத்துவதுதான் நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற வழியாகும்.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாடலில் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
5 பேதைமை அல்லது ஊதியம் இல்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன்திறம் அத்தையான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10 கானத் தோர்நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
15 அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே.

அருஞ்சொற்பொருள்:
1. சிதடு = குருடு; பிண்டம் = தசை. 2. குறள் = குறுமை (ஈரடி உள்ள மனிதன்); ஊம் = ஊமை. 3. மா = விலங்கு; மருள் = மயக்கம் (அறிவு மயக்கம்); உளப்பாடு = உள்ள தன்மை. 4. எச்சம் = குறைபாடு. 5. பேதைமை = பேதைத் தன்மையுடைய பிறப்பு; ஊதியம் = பயன். 7. திறம் = கூறுபாடு, தத்துவம். 8. வரி = கோடு; பொறி = புள்ளி. 9. ஏனல் = தினைப்புனம். 12. புய்த்தல் = பிடுங்கல், பறித்தல்; கழை = கட்டை, கழி. 13. போது = மலரும் பருவத்திலுள்ள அரும்பு. 14. கடுக்கும் = ஒக்கும். 17. போற்றுதல் = பாதுகாத்தல்.

உரை: சிறப்பில்லாத குருடு, உருவமில்லாத தசைப் பிண்டம், கூன், குட்டை, ஊமை, செவிடு, விலங்கின் வடிவம், அறிவு மயக்கம், ஆகிய எட்டுவகைக் குறையுள்ள பிறவிகள் எல்லாம் பயனற்றவை என்று அறிஞர்கள் முன்னரே கூறினர். நான் சொல்ல வந்தது, ”எது பயனுள்ள பிறவி” என்பது.

வட்ட வடிவமான வரிகளையும், சிவந்த புள்ளிகளையும் உடைய சேவல் கோழிகள் கூவித் தினைப்புனம் காப்பவர்களை எழுப்பும் காட்டில் உன் பகைவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். நீயோ வளமான நாட்டில் உள்ளாய். உன் நாட்டில், கரும்பு விளையும் வயல்களின் வேலிக்கு வெளியே இருப்பவர்கள் கரும்பு வேண்டும் என்று கேட்பதால், வேலிக்கு உள்ளே இருப்பவர்கள் கரும்புகளைப் பிடுங்கி வேலிக்கு வெளியே எறிகிறார்கள். அவர்கள் எறியும் கரும்புகளின் தண்டுகள், அருகில் உள்ள குளங்களிலுள்ள தாமரை அரும்புகளின் மீது விழுவதால் அவ்வரும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இந்தக் காட்சியைப் பார்த்தால், கழைக்கூத்தர்கள் ஆடும் களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பதுபோல் உள்ளது. நீ இத்தகைய மருத நில வளமுடைய நாட்டை உடையவன். அதனால், உன் செல்வம் நீ அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்குப் பயன்படட்டும். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் அடைவதற்கு உன் செல்வத்தை நீ பயன்படுத்தாவிட்டால், நீ உன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறியவனாவாய்.

சிறப்புக் குறிப்பு: இப்பிறவியில் செல்வத்தைப் நல்வழியில் பயன்படுத்தி, அறவழியில் நின்று, பொருள் ஈட்டி, இன்பம் துய்த்து வாழ்ந்தால், மறுபிறவில் குருடு, கூன், ஊமம், செவிடு போன்ற குறைகள் இல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாகப் புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

27. புலவர் பாடும் புகழ்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ( 27 – 30, 325). இவர் உறையூரைச் சார்ந்தவர். இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன். இவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடியவர். இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையிலும் ஒன்று உண்டு (133). புறநானூற்றுப் பாடல் 29 -இல் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்பார்க்கு இனன் ஆகிலியர்” என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறிகிறார். மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி (27 - 33, 45, 68, 225, 382, 400). சோழன் கரிகால் பெருவளத்தானுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்தனர். கரிகாலன் இறந்த பிறகு, சோழநாட்டை இரண்டாகப் பிரித்து, மணக்கிள்ளி உறையூரைத் தலைநகரமாகவும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகவும் கொண்டு சோழநாட்டின் இருபகுதிகளையும் ஆண்டனர். மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்று ஒரு மகனும் நற்சோனை என்று ஒரு மகளும் இருந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். மணக்கிள்ளியின் மகள் நற்சோனை, சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை மணம் புரிந்தாள். சேரன் செங்குட்டுவன் மற்றும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆகிய இருவரும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த பிள்ளைகள்.

ஒரு சமயம், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இமயவரம்பனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இறந்த பிறகு, தன் தந்தையைப்போல், நலங்கிள்ளி பூம்புகாரைத் தலைநகரமாகக்கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். அவனுக்கும், மணக்கிள்ளியின் மகன் நெடுங்கிள்ளிக்கும் பகை மூண்டது. ஒரு சமயம், நெடுங்கிள்ளி ஆவூர் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது, நலங்கிள்ளியின் சார்பாக, அவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு நெடுங்கிள்ளியை வருத்தினான். நெடுங்கிள்ளி, அங்கிருந்து தப்பி, உறையூருக்குச் சென்றான். பின்னர், நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டாலும், நெடுங்கிள்ளி போருக்கு வராமல், தன் அரண்மனைக்குள் அடைபட்டுக் கிடந்தான். அச்சமயம், கோவூர் கிழார் என்னும் புலவர், நெடுங்கிள்ளியிடம் சென்று, “நீ அறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளிக்கு உன் நாட்டைக் கொடு; மறவழியில் வாழ விரும்பினால் நலங்கிள்ளியுடன் போர் செய். இரண்டு செயல்களில் எதையும் செய்யாமல், அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டிருப்பது வெட்கத்திற்குரியது” என்று அறிவுரை கூறினார் (புறநானூறு – 44). நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வியடைந்ததாக வரலாறு கூறுகிறது.

நலங்கிள்ளி ஒரு சிறந்த வீரனாகவும் அரசனாகவும் இருந்தது மட்டுமல்லாமல் மிகுந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் இருந்ததாகத் தெரிரிகிறது. இவன் இயற்றியதாகப் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் (73, 75) உள்ளன. இவன் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் தேர் வண்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “சிறந்த குடியில் பிறந்து அரசர்களாக இருக்கும் பலருள்ளும் புலவரால் பாடப்படும் புகழுக்கு உரியவர்கள் சிலரே. அவ்வாறு புகழ் பெற்றவர்கள் ஓட்டுநர் இன்றித் தானே இயங்கும் வானவூர்தியில் ஏறி விண்ணுலகம் செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வளர்தலும், தேய்தலும், இறத்தலும், பிறத்தலும் இவ்வுலகின் இயற்கை; ஆகவே, வருந்தி வருவோர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அருள் செய்க.” என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: முதுமொழிக் காஞ்சி . அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருட்களைப் பற்றிக் கூறுவது.

சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நிறைகண்டு அன்ன
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
5 உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர், விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்
10 கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
15 வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. பயத்தல் = கொடுத்தல், பிறப்பித்தல் (பூத்த); கேழ் = நிறம். 2. அலரி = மலர் (பூவிற்குப் பொதுப் பெயர்); நிரை = ஒழுங்கு, படைவகுப்பு (வரிசை). 3. விழு = சிறந்த; திணை = குடி. 5. உரை = புகழ். 6. மரை = தாமரை. 8. வலவன் = ஓட்டுபவன்; ஊர்தி = வாகனம். 9. எய்துதல் = அடைதல். 11. தேய்தல் = குறைதல்; பெருகல் = வளர்தல். 14. புத்தேள் = தெய்வம். 15, வல்லுநர் = அறிஞர். 16. மருங்கு = விலாப்பக்கம், இடை, வடிவு. 19. துப்பு = வலிமை.

உரை: சேற்றிலே வளரும் தாமரைச் செடியில் பூத்த ஒளிபொருந்திய தாமரை மலரில் உள்ள பல இதழ்களின் வரிசைபோல், உயர்வு தாழ்வு இல்லாத சிறந்த குடியில் பிறந்த அரசர்களை எண்ணிப்பார்க்கும்பொழுது, புகழுக்கும், புலவர்களால் புகழ்ந்து பாடும் பாடல்களுக்கும் உரியவர்கள் சிலரே. தாமரையின் இலைபோலப் பயனின்றி மறைந்தவர் பலர். தாம் செய்ய வேண்டிய நல்வினைகளைச் செய்து முடித்தவர்கள் புலவர்களால் பாடப்படும் புகழுடையவர்களாவார்கள். மற்றும், அவர்கள் ஆகாயத்தில் ஒட்டுநர் தேவையில்லாமல் தானாகவே செல்லும் விமானங்களைப் பெறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி! தேய்தல், வளர்தல், மறைதல், இறந்தவர்கள் மீண்டும் பிறத்தல் போன்ற உண்மைகளை அறியாதவர்களுக்கு அறிவுறுத்தும் திங்கள் தெய்வம் உலாவும் இவ்வுலகத்தில், ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும், அறிஞர்களாக இருந்தாலும், உன்னிடம் வருந்தி வந்தவர்களின் நிலையைப் பார்த்து அவர்களுக்கு அருள் செய்வாயாக! குறைவற்ற வலிமையையுடைய உன் பகையை எதிர்கொண்டவர்கள் அருளில்லாதவர்களாகவும் ஈகைத்தன்மை அற்றவர்களாகவும் ஆவார்களாக.

சிறப்புக் குறிப்பு: நூறு என்ற சொல் ஒரு எண்ணைக் குறிக்காமல் பல என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ”நூற்றிதழ் தாமரைப்பூ” என்று (ஐங்குறுநூறு – 20) பிறரும் பாடியுள்ளனர்.

”உரை” என்ற சொல் எல்லோராலும் புகழப்படும் புகழையும், ”பாட்டு” என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

26. நோற்றார் நின் பகைவர்!

பாடியவர்: மாங்குடி மருதனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 18-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்களில் வெற்றி பெற்றுச் சிறந்து விளங்கியதைக் கண்ட மாங்குடி மருதனார், “வேந்தே! நீ நான்மறை கற்ற அந்தணர்கள் சூழ வேள்விகள் செய்தாய். உன் பகைவர்கள் உன்னிடம் தோற்று வீர மரணம் அடைந்ததால் அவர்கள் தேவருலகம் சென்றார்கள்.” என்று அவனைப் இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நளிகடல் இரும்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களன்அகற்றவும்,
களன்அகற்றிய வியல்ஆங்கண்
5 ஒளிறுஇலைய எஃகுஏந்தி
அரைசுபட அமர்உழக்கி,
உரைசெல முரசுவெளவி,
முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீஇத்
10 தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
15 வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர்பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. நளி = பெருமை; இரு = பெரிய; குட்டம் = ஆழம். 2. வளி = காற்று; புடைத்தல் = குத்துதல், தட்டுதல்; கலம் = மரக்கலம். 4. வியல் = அகலம். 5. எஃகு = வேல், ஆயுதம். 6. அரைசு = அரசன்; அமர் = போர்; உழக்குதல் = கலக்குதல், வெல்லல். 7. உரை = புகழ். 9. புனல் = நீர். 10. துழத்தல் = கலத்தல்; வல்சி = உணவு. 11. அடு களம் = போர்க்களம்; அடுதல் = கொல்லல். 12. ஆன்ற = மாட்சிமைப்பட்ட, நிறைந்த; கொள்கை = அறிவு, கோட்பாடு, நோன்பு. 13. முதல்வர் = தலைவர்; மன்னுதல் = நிலைபெறுதல். 15. வாய் = சிறப்பு; முற்றிய = முடித்த. 16. நோற்றல் = தவஞ் செய்தல், பொறுத்தல்; மன்ற – அசைச் சொல், மிக. 17. மாற்றார் = பகைவர். 18. ஆண்டு = அவ்வுலகம்.

கொண்டு கூட்டு: செழிய, வேந்தே, ஆற்றாராயினும் ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றெரென்னும் பெயர்பெற்று நோற்றார் எனக் கூட்டுக.

உரை: ஆழம் மிகுந்த பெரிய கடலில் காற்றால் தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதுபோல, உன் யானை போர்க்களத்தில் பகைவர்களின் படையை ஊடுருவிச் சென்றது. அந்த யானை சென்ற அகன்ற பாதையில் ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்து நின்ற வேந்தர்களை அழித்து அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடியணிந்த தலைகளை அடுப்பாகவும், அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலைபெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ்வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு ஆகியவற்றையுடைய அந்தணர்களை உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள்.

உன்னோடு மாறுபட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள்தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள்.